ஸந்நிதிக்கு வரும் குழந்தைகளுக்கு வாழைப்பழமோ கற்கண்டோ ஸ்ரீபெரியவாள் தவறாமல் வழங்குவார். தாமே நேராகக் கொடுப்பதுண்டு; அணுக்கத் தொண்டர்களைக் கொண்டு கொடுப்பதுமுண்டு.
விடுமுறை நாள்களில் பள்ளி ஆசிரியர்கள் பஸ் அமர்த்திக்கொண்டு பசங்களுடன் வருவது வழக்கம். அதனால் அந்நாள்களில் பணியாளர்கள் முன்னதாகவே வாழைப்பழமும் கற்கண்டும் நிறைய எடுத்து வைத்து விடுவார்கள்.
ஒரு விடுமுறை தினத்தன்று பெரியவாள் “இன்னிக்குக் கொழந்தைகளுக்கு வாழைப்பழம், கல்கண்டு குடுக்க வேண்டாம்” என்றார். ஏன் அப்படிச் சொன்னாரென்று புரியவில்லை.
தப தப என்று ஒரு பஸ்-லோட் பள்ளிச் சிறுவர்கள் ஆசிரியர்களுடன் வந்து விட்டனர். தம்மைக் காண வந்த சிட்டுக்களுக்கு ஒன்றும் தராமலா இந்த மா மதுர மஹா தாத்தா திருப்பி அனுப்பி வைப்பார் என்று பணியாளர் எண்ணினார்.
சரியாக அதே சமயம் திருமாளம் பஞ்சாபகேச ஐயர் என்ற பக்தர் ஒரு மூட்டை ஸஹிதம் வந்தார். மூட்டையைப் பெரியவாளுக்கு ஸமர்ப்பித்து, “பெரிவா ப்ரயோஜனப் படுத்திக்கணும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.
மூட்டையிலிருந்து குண்டு மல்லிகைகள் போன்ற நெற்பொரி. பெரியவாள் திருவமுது செய்து வந்தது அதைத்தான். இதை நினைத்தே அவர் ‘ப்ரயோஜனப் படுத்தி’க் கொள்ளச் சொன்னது. ஆனால் பெரியவாளோ தம்முடைய பிக்ஷைக் காலம் வரை தள்ளிப்போடாமல் அப்போதே அதைப் பிரயோஜனப்படுத்திக் கொண்டு விட்டார்.
பணியாளரைப் பார்த்து, “தேவாளுக்குப் பொரி ரொம்ப இஷ்டம். தெரியுமோ? கல்யாணத்துலகூட லாஜ ஹோமம்னு பொரி ஹோமம் பண்றாளோன்னோ? இந்தக் கொழந்தைகள்ளாம் தேவாள்தான். இவாளுக்கு வெல்லச் சக்கரையும் கொஞ்சம் சேர்த்து பொரி நெறய்ய விநியோகம் பண்ணுங்கோ. ஒடம்புக்கும் ஹிதம். மனஸுக்கும் ஸத்வம். பொரி சாப்பிட்டா பாபம் போறதுன்னு சாஸ்த்ரம்” என்றார்.
அவ்வாறே சிறாருக்கு வெல்லச் சர்க்கரை சேர்த்த பொரி வழங்கப்பட்டது. ஆவலாக வாங்கிக் கொண்டனர்.
தலைமையாசிரியர் வியப்பில் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் சொன்னார் : “பசங்களில் பல பேருக்கு மஞ்சட்காமாலையும், வயிற்றுப்போக்கும். வாழைப்பழம் கூடாதென்று டாக்டர் சொல்லியிருக்கிறார். ‘பெரியவர்களோ வாழைப்பழம் கொடுப்பதுதானே வழக்கம்? அப்படிக் கொடுத்தால் பிரஸாதத்தை என்ன செய்வது?’ என்று கவலைப்பட்டுக் கொண்டேதான் வந்தேன். பெரியவர்களுக்குத் தெரியாததா? அதுதான் நெற்பொரி கொடுத்து அநுக்கிரஹித்திருக்கிறார்”.
அந்த தீர்க்க திருஷ்டி இருக்கட்டும். அது எல்லா மஹான்களுக்குமே உண்டுதான். ஆனால் அந்தப் பள்ளிப் பாலர்களை தேவர்கள் என்றாரே! அந்த எளிமை அவரொருவருக்கே உரித்தானதல்லவா?
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
source:::::www.periva.proboards.com
natarajan
Read more: http://periva.proboards.com/thread/4830/mahaperiyavaa-children-raa-ganapathy-anna/#ixzz2amL4u8MM
