திவான் ஜர்மன் தாஸ் என்பவர், இந்திய சமஸ்தான மன்னர்கள் பலருடன் நெருங்கிப் பழகியவர். தன் அனுபவங்களை, அவர், ‘மகாராஜா’ என்ற, ஆங்கில நுாலில் எழுதியுள்ளார். அதில், அவர் கூறியுள்ள சில சம்பவங்கள் :
ஐதராபாத் நிஜாமின், கருமித்தனம் மிகப் பிரசித்தம். அவர், யாரையாவது, தேனீருக்கு அழைத்தால், தேனீருடன், இரண்டு பிஸ்கட்டுகள் வரும். ஒரு பிஸ்கட் நிஜாமுக்கு; மற்றொன்று விருந்தாளிக்கு.
நிஜாமிடம், 282 காரட் வைரக்கல் ஒன்று இருந்தது. அதை, எப்போதும் மேஜை மீது, வைத்திருப்பார். அவரது உதவியாளராக இருந்த, சுல்தான் அகமது மீது, நிஜாமுக்கு ரொம்ப பிரியம். அவருக்கு ஏதேனும் வெகுமானம் செய்ய வேண்டுமென்று நினைத்தார். அதனால், அகமதை கூப்பிட்டு, கையை நீட்டச் சொல்லி, வைரக் கல்லை கொடுத்து, ‘சில நிமிடங்கள் வைத்துக் கொண்டிரு…’ என்று சொல்லி, பின், திரும்ப வாங்கிக் கொண்டார்.
தாட்டியா என்ற சமஸ்தானம், உயர்ரக வெண் ணெய்க்கு பெயர் பெற்றது. தமக்கு, வெண்ணெய் அனுப்பும்படி, அந்த சமஸ்தானாதிபதி யிடம் நிஜாம் கேட்கவே, அவரும், பன்னிரண்டு டின் வெண்ணெய் அனுப்பினார். ஸ்டோர் ரூமில் வைக்கும்படி கூறி, யாரும், அதை தொடக் கூடாது என்றும், கட்டளையிட்டார் நிஜாம்.
இரண்டு வருடம், அந்த டின்கள் அப்படியே கிடந்தன. வெண்ணெயிலிருந்து, சகிக்க முடியாத துர்நாற்றம் வீசவே, பயத்தோடு நிஜாமிடம் போய் கூறினர். ‘அப்படியானால், கடைத் தெருவுக்கு கொண்டு போய் விற்று விடுங்கள்…’ என்றார் நிஜாம்.
யாரும் வாங்கிக் கொள்ளவில்லை. ரெட்டி என்ற போலீஸ் அதிகாரியை கூப்பிட்டனுப்பிய நிஜாம், ‘இந்துக்களின் கோவில்களில், விளக்கேற்றுவதற்கு உபயோகப்படும். அவர்களிடம் விற்று விடு…’ என்றார்.
கோவில்களிலும் வாங்கவில்லை. அதை, நிஜாமிடம் சொல்ல அஞ்சி, வெண்ணெயை, சாக்கடையில் வீசி விட்டு, வெண்ணெய் விற்ற பணம் என்று, 201 ரூபாயை, நிஜாமிடம் தந்தார். மகா சந்தோஷத்துடன், பணத்தை பெற்றுக் கொண்டார் நிஜாம்.
திருமணத்துக்கு அழைப்பு வந்தால், தட்டாமல் செல்வார் நிஜாம். சீர் வரிசைகளில், விலை உயர்ந்ததாக என்ன இருக்கிறதோ, அதை, தனக்கென்று எடுத்துக் கொள்வார். நிஜாம், அந்த திருமணத்திற்கு வருகை தந்தது, அவர்களுக்கு, பெரிய கவுரவம் என்றும், அதற்கு கட்டணமாகத் தான் அந்தப் பொருள் என்றும் கூறுவார். இப்படி, ஏராளமான அணி வகைகள் சேர்ந்தன, நிஜாமின் கஜானாவில்!
- ‘சமஸ்தானத்து மன்னர்’ நூலிலிருந்து…
தாமஸ் ஆல்வா எடிசனிடம், அவர் மனைவி, ‘நீங்கள் ஓய்வு இல்லாமல், வேலை பார்த்து விட்டீர்கள். எங்கேயாவது போய், கொஞ்ச நாள் களைப்பாற வேண்டும்…’ என்றாள்.
‘எங்கே போவது?’
‘எந்த இடத்திலிருந்தால், இந்த உலகத்தையே மறந்து விட முடியுமோ… அங்கே போகலாம்…’
‘சரி. நாளை போகலாம்…’ என்றார் எடிசன்.
மறுநாள் காலை, அவர் தன் ஆய்வுக் கூடத்திற்கே திரும்பி விட்டார்.
source:::: Dinamalar … Varamalar…
natarajan
