Quantcast
Channel: old memories – Take off with Natarajan
Viewing all articles
Browse latest Browse all 391

”இட்லி என்று பெயர் எப்படி வந்தது … ?” !!!

$
0
0
வாழ்க்கைக்கும் சாப்பாட்டுக்கும் சம்பந்தம்

மஹான் சாப்பிடுவது என்னவோ அவல்பொரிதான். எப்போதாவது கீரையை தமது மதிய உணவில் சேர்த்துக் கொள்வார் என்று மடத்து ஊழியர்கள் சொன்னது உண்டு. இருந்தாலும் சமையல் பக்குவத்தைப் பற்றி அவர் சொல்வதைக் கேட்டு பிரபல சமையல்காரர்களே மூக்கில் விரல் வைத்திருக்கிறார்கள்.

அவ்வப்போது மடத்திற்கு அரிசி, பருப்பு, உளுந்து என்று பக்தர்கள் மூட்டை மூட்டையாகக் கொண்டுவந்து கொடுப்பார்கள். ஒரு தடவை பக்தர் ஒருவர் தன் தோட்டத்தில் பயிரான கருணைக்கிழங்கை மூட்டையாகக் கொண்டு வந்து கொடுத்தார். மடத்தில் சிப்பந்திகள் மிகவும் திருப்தியாக அதை மசியல் செய்து எல்லோருக்கும் பரிமாறினார்கள். சாப்பிட்டவர்கள், முதலில் அதை எடுத்து வாயில் போட்ட பிறகு அதைத் தொடவே இல்லை. இலையில் மூலையில் அதை ஒதுக்கி வைத்து விட்டனர். ஏனெனில் கிழங்கு மசியல் நாக்கில் பட்டவுடன் அரிப்பு ஏற்பட்டு விட்டது. அதனால்தான் ஒதுக்கிவிட்டார்கள்.

இந்த ’மசியல் பகிஷ்காரம்’ மஹானின் காதுக்குப் போகாமல் இருக்குமா?

சமையல் செய்தவர்கள் மஹானின் முன்னால் கையைக் கட்டிக் கொண்டு விசாரணையை எதிர்பார்க்கும் குற்றவாளிகளைப் போல் நின்றுகொண்டு இருந்தார்கள்.

அவர்கள் எல்லோரும் பயந்தபடி ஏதும் நடக்கவில்லை. அமைதியான குரலில் மஹான் கேட்டார்:

“எப்படிச் சமையல் செய்தாய்?”

“கழுநீரில் நன்றாக அலசியபிறகு புளிவிட்டுக் கொதிக்க வைத்தேன்… இந்தக் கிழங்கு அதற்கெல்லாம் மசியவில்லை… அதனுடைய குணம் மாறவில்லை..” என்று பிரதம சமையல்காரர் குறைப்பட்டுக் கொண்டார்.

பெரியவா சிரித்தபடியே சொன்னார்:

“கருணைக்கிழங்கை வெந்நீரில் வேகவைக்கும்போது அதோடு வாழைத்தண்டை சிறிதாக நறுக்கிப் போட வேண்டும். இரண்டும் நன்றாக வேகும்போது, கருணையின் குணம் மாறிவிடும்” என்றார்.

மறுநாள் இந்த முறைப்படி சமைத்தபோது எல்லோரும் விரும்பி, கேட்டுச் சாப்பிட்டார்கள்.

சமையல் விஷயத்தில் மஹானின் இன்னொரு அனுபவம்.

பண்டிதர் ஒருவர் மஹானிடம் பேச வந்தார். அவரிடம் ஏதேதோ பேசிக்கொண்டு இருந்து விட்டு, மஹான் ’‘இட்லி’ என்று ஏன் பெயர் வந்தது?’ என்று கேட்டார்.

ஏதோ புதிய விளக்கம் தருவதாக நினைத்த அந்தப் பண்டிதர் சொன்னார்:

“இலையில் இட்லியைப் போட்டவுடன் அது காலியாகி விடுகிறது. இட்டு+இல்லை=இட்டிலை-இட்லி” என்றார்.

மஹான் சிரித்துக்கொண்டே அவரிடம் கேட்டார்:

“இலையில் இட்லி விழுந்ததும் எல்லோரும் அதை இல்லையின்னு ஆக்கிடும் சாத்தியம் நம்பும்படியாக இல்லையே. என்னை மாதிரி எத்தனையோ பேர் அதை இலையிலேயே வச்சிண்டு உட்கார்ந்து இருக்காளே, அதனால் நீங்கள் சொல்ற விளக்கம் சரியில்லை.”

”பெரியவா சொன்னா கேட்டுக்கிறேன்….”

“ஏதாவது நாம் சமைக்கிறோமுன்னா, அதுக்குக் கொஞ்சம் சிரமம் எடுத்துக்கணும் இல்லையா?”

“அடுப்புப் பக்கத்துலேயே நிக்கணும். கருகிப் போகாமப் பாத்துக்கணும். இல்லேன்னா பக்குவம் கெட்டுப் போகும் இல்லையா? இட்லியை எடுத்துக்கோங்கோ. அதை ஊத்தி வச்சுட்டு பத்து நிமிஷம் அதை மறந்து அந்தண்டை போய் வேறு வேலையைக் கவனிக்கலாம். தானாக வெந்து, பக்குவமாக இருக்கும். ஒன்றை வைத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் வருவதை இடுதல் என்கிறார்கள். ‘இடுகாடு, இடுமருந்து’ என்பது போல் இட்லி என்று பெயர் வந்திருக்கலாம்” என்று முடித்தார் எல்லாம் தெரிந்த ஞானியான மஹான்.

மிகப்பெரிய விஷயங்கள் மட்டுமல்லாமல் சிறு சிறு விஷயங்களுக்கும் அவர் அளிக்கும் விளக்கங்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டன. சமையல் விஷயமாக அவர் சொன்ன கருத்துக்கள் காஞ்சிமடத்தில் இன்றும் உலா வருகின்றன.

ஒருநாள் மடத்து சமையல்காரர் ஒருவர், மடத்திற்கு சமையல் செய்ய பெருங்காயம் அதிகமாகத் தேவை என்று விண்ணப்பம் கொடுக்க, “சாம்பார், ரசம் வைக்கும்போது தனித்தனியாக பெருங்காயத்தை போடக்கூடாது. நீ பருப்பை சாம்பாருக்காக வேக வைக்கும்போது அதில் பெருங்காயத்தைப் போட்டுடு. அதே பருப்பு தானே சாம்பார், ரசம் வைக்க உதவுகிறது. அதில் பெருங்காய வாசனை இல்லாமலா போகும்? இப்படி செய்து பார். அதிகப் பெருங்காயம் தேவைப்படாது…” என்று மஹான் விளக்கமாகச் சொன்னார். இத்தனை நாள் சமையல் செய்யும் தனக்கு இந்த உத்தி தெரியவில்லையே என்று புலம்பினார் சமையல்காரர்.

இன்னொரு சம்பவம் – ‘ரசமான விவாதம்’ :

அதாவது குழம்புக்கும் ரசத்துக்கும் என்ன வித்தியாசம்?

“இரண்டிலுமே பருப்பு, புளி, உப்பு, சாம்பார்பொடி பெருங்காயம் தானே இருக்கு?”

அங்கிருந்த பக்தர்கள் “சாம்பாரை முதலிலும் ரசத்தை பின்னாலும் சாப்பிடுகிறோம், அதுதான் வித்தியாசம்” என்றார்கள்.

மஹான் பெரிதாகச் சிரித்தார்.

“குழம்பில் காய்கறி உண்டு. ரசத்தில் இல்லை. இதுதான் வித்தியாசம்” என்றார்.

இந்தக் குழம்பையும் ரசத்தையும் வைத்து அன்று ஒரு சிறிய பிரசங்கத்தையே எல்லோருக்கும் விளக்கமாகச் சொன்னாராம்.
அவர் சொன்னதன் கருத்து என்ன?

“தான் என்னும் அகங்காரம் மனதில் இடம் பெற்று விட்டதால், நாம் குழம்பிப் போகிறோம். அதாவது சாம்பார் போல்… ஆனால் இது இல்லையென்றால் மனம் தெளிவாக இருக்கும் ரசம் போல. இவைகளை மறக்கக் கூடாதுங்கிறதுக்காகத்தான் தினமும் குழம்பு ரசம் வைக்கிறோம். நீங்கள் விருந்துக்குச் சென்றால் குழம்பு, ரசம், பாயசம், மோர் என்று வரிசைப்படி சாப்பிடுகிறோம் இல்லையா? இந்த உணவுக்கலாசாரம் வேறு எங்கேயும் இல்லை. மனிதன் பிறக்கும் போதே அவன் மனதில் ‘தான்’ என்னும் அகங்காரம் இடம் பிடித்து வருகிறது. அவன் பலவிதமான குழப்பத்தில் ஆள்வதால் அவன் மனம் குழம்புகிறது. இதைத்தான் முதலில் நாம் சாப்பிடும் ‘குழம்பு’ எடுத்துக் காட்டுகிறது. அது தெளிந்துவிட்டால் ரசம் போல் ஆகிவிடுகிறது. இவற்றை தொடர்வது இனிமை, ஆனந்தம் அவைதான் பாயசம் – மோர் – பட்சணம் – இதைப் போல் மனிதனின் வாழ்க்கைக்கும் சாப்பிடும் சாப்பாட்டுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு.

மோர் தனித்தன்மை வாய்ந்தது. பிரம்மானந்தத்துடன் நம் மனம் லயிக்க இது உதவுகிறது. பாலிலிருந்து தயிர், வெண்ணை, நெய் மோர் என்று தொடராகப் பொருட்கள் நமக்குக் கிடைக்கின்றன. மோர்தான் கடைசி நிலை. அதிலிருந்து நீங்கள் எதையுமே எடுக்க முடியாது.

அதனால் தான் பரமாத்மாவைக் கலந்தபின், மேலே தொட ஏதும் இல்லை என்பதை மோர் தெளிவாக்குகிறது. அதாவது மோர் சாதம் முடிந்தால் இலையை விட்டு எழுந்திருக்க வேண்டாமா?” என்று அன்றைய தினம் நீண்ட பிரசங்கமே செய்து விட்டார் மஹான்.

நாம் தினமும் சாப்பிடும் சாப்பாட்டைப் பற்றிய விளக்கத்தை இதுவரை, இதைப்போல் யாரும் சொன்னதே இல்லை. இவர் சகலமும் தெரிந்தவர் என்பதற்கு இதைப் போல் எவ்வளவோ எடுத்துக்காட்டுகள், தெய்வீகத்தைத் தவிர அவருக்கு வேறு ஏதும் தெரியாது என்று நினைப்பவர்கள், மஹானை சரிவர அறியாதவராகத்தான் இருப்பார்கள்.

source:::: http://www.periva.proboards.com

natarajan

Read more: http://periva.proboards.com/thread/6446/life-kanchi-swamis-lectures-venkatasaamy#ixzz2sWGfShHA



Viewing all articles
Browse latest Browse all 391

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>